திருநெல்வேலி: தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் திசையன்விளை தாலுகா கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணை தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாகச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. அந்த வகையில் திசையன்விளை அருகிலுள்ள ஆயன்குளம் ஆற்றுப்படுகை நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வெளியேறியது.
ஆரம்பத்தில் விநாடிக்கு 50 கனஅடி வீதம் நீர் எனத் தொடர்ச்சியாகப் பல நாள்கள் இந்தக் கிணற்றுக்குள் விழுந்தாலும்கூட தற்போதுவரை அக்கிணறு நிரம்பவில்லை. உள்ளே செல்லும் நீர் எங்கே போகிறது என்ற வினாவுக்கு விடையும் கிடைக்காமல் மிகப்பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி குழுவுக்குப் பரிந்துரை
இதேபோல் பல ஆண்டுகளாக இந்தக் கிணற்றில் விழும் நீர் எங்கே செல்கிறது என்ற குழப்பம் நீடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் இதைச் சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் உப்பு நீர் நன்னீராக மாறவும் இக்கிணற்று நீர் பயன்படுவதாக அப்பகுதி மக்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து சமீபத்தில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கிணற்றை நேரில் சென்று ஆய்வுசெய்தனர். பின்னர் கிணறு நிரம்பாத காரணத்தைக் கண்டறியச் சென்னை ஐஐடி குழுவினர் நேரில் வந்து ஆய்வுசெய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசுக்கு, மாவட்ட ஆட்சியர் பரிந்துரைசெய்தார்.
நீர் எங்கே செல்கிறது?
இதனை ஏற்றுச் சென்னை ஐஐடியிலிருந்து நேற்று (டிசம்பர் 2) பேராசிரியர்கள் வெங்கட் ரமணன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் அபூர்வ கிணற்றை நேரில் சென்று ஆய்வுசெய்ய தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக அருகிலிருந்த விவசாயிகள், பொதுமக்களிடம் கிணற்றின் தன்மை குறித்தும், எத்தனை ஆண்டுகள் இதுபோன்று கிணறு நிரம்பாமல் இருக்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் கிணற்றில் விழும் நீர் எங்கே செல்கிறது என்பது குறித்தும் பொது மக்களிடம் கருத்துகளை ஐஐடி குழுவினர் கேட்டனர்.
நீர் ஊற்று மூலமாகச் செல்கிறதா?.
அதைத்தொடர்ந்து அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் நீர் ஊற்று மூலமாகச் செல்கிறதா? என்பதை ஆராய அந்தக் கிணற்றிலிருந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (டிசம்பர் 3) ஐஐடி குழுவினர் இந்தக் கிணற்றை ஆய்வுசெய்யவுள்ளனர். இவர்களுடன் நெல்லை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், தன்னார்வலர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் பலரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
கிணறு நிரம்பாவிட்டாலும் அதன்மூலம் அருகில் உள்ள வேளாண் நிலங்கள் பயன்பெறுவதால் மேலும் கூடுதலாக நீரை இந்தக் கிணற்றுக்குள் திருப்பிவிட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும் என்பதே உழவரின் கோரிக்கையாக உள்ளது. எனவே ஐஐடி குழுவினர் ஆய்வு அறிக்கையின்படி இந்தக் கிணற்றை மேம்படுத்திக் கூடுதலாக நீர் விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு அதிசயக் கிணறா? கூட்டம் கூட்டமாக பார்த்துச் செல்லும் மக்கள்