திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார். இவர் கழுத்து கைகளில் கிலோ கணக்கில் தங்க நகைகள் அணிந்து நடமாடும் நகைக்கடை போல வலம் வந்தவர். இதன் மூலம் நெட்டிசன்களிடையே பிரபலமாகினார். மேலும் தென் தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்படும் ராக்கெட் ராஜாவின் வலதுகரமாக ஹரி நாடார் செயல்பட்டார்.
இதுமட்டும் இன்றி, ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். இருவரும் சேர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டனர். அப்போது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் சுமார் 37,000 வாக்குகள் பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்கச் செய்தார்.
இவர் பெற்ற வாக்குகளால் அந்த தேர்தலில் முன்னாள் திமுக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியைத் தழுவினார். ஆனால், தேர்தல் முடிந்த கையோடு மோசடி வழக்கு ஒன்றில் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் சிறைக்குச் சென்ற பிறகு ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா இடையேயான உறவு முறிந்ததாக பேசப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில் ஹரி நாடாரை கட்சியில் இருந்து நீக்குவதாக ராக்கெட் ராஜா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மேலும் ஹரி நாடாரின் மனைவி ஷாலினி, தனது கணவரை மலேசிய பெண் ஒருவர் தன் வசம் வைத்திருப்பதாகவும் அவரிடம் இருந்து கணவரை மீட்டுத் தரும்படி காவல் துறையிடம் ஷாலினி மனு அளித்தார். மேலும், ஹரி நாடார் மலேசியப் பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாலினி குற்றம்சாட்டிய மலேசிய பெண் தான் சிறையில் இருக்கும் ஹரி நாடாரை வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் சிறைக்குள் இருக்கும் ஹரி நாடார் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இது போன்று பல்வேறு பரபரப்புகளுக்கு உள்ளான ஹரி நாடார் மீது நெல்லை மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ராக்கெட் ராஜா கைதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், அரசுப்பேருந்து மீது கல் வீசி சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆஜராக ஹரி நாடார் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். சிறைக்குள் வைத்து ஹரி நாடாரின் நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொத்து கொத்தாக நகைகளுடன் வலம் வரும் ஹரி நாடார் இம்மி அளவு கூட நகைகள் இல்லாமல் வெறும் கழுத்தோடு அழைத்து வரப்பட்டதை அவரது ஆதரவாளர்கள் சோகத்துடன் பார்த்தனர். அதே சமயம் தான் எப்போதும் அணியும் குர்தா வடிவிலான சட்டையுடன் வந்திறங்கினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் வழக்கை, நெல்லை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து மீண்டும் பலத்த பாதுகாப்போடு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹரி நாடார் நீதிமன்றத்திற்கு வந்தபோது மலேசியப் பெண்ணும் அங்கு வந்திருந்தார். அப்போது அவர் ஹரி நாடார் கையைப் பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார். அதேசமயம் விசாரணை முடிந்து வெளியே வந்த போது நீதிமன்ற வளாகத்தில் ஹரி நாடாரின் ஆதரவாளர்கள் சமுதாய பெயரை கூறி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்தனர். இந்த வழக்கு குறித்து ஹரி நாடாரின் வழக்கறிஞர் கூறியபோது, "சிறைக்குள் வைக்க வேண்டும் என்ற நோக்கில் பொய் வழக்கு போட்டுள்ளனர். விரைவில் அவர் அந்த வழக்கிலிருந்து வெளியே வருவார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது!