திருநெல்வேலி: சர்வதேச நிலவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் செயற்கைக்கோள் ஏவுதல் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 22) நடைபெற்றது.
இதில், நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயந்திர ஒருங்கிணைப்பு துறை மேலாளர் கவுதமன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதல் குறித்தும், அதன் தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்தும் செயற்கைக்கோள் அனுப்புவதில் இந்தியா கடந்து வந்த பாதை குறித்தும் விளக்கம் அளித்தார். குறிப்பாக, சந்திராயன் விண்கலம் குறித்து மாணவர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் அளித்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கௌதமன், "மகேந்திரகிரி மையத்தில் சந்திராயன் விண்கலத்துக்கான சோதனைகள் மற்றும் எதிர்கால செயற்கைக்கோளுக்கான சோதனைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. அதேபோல் வழக்கமான கிரையோஜெனிக் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.
புதிதாக இங்கு செமி கிரையோஜெனிக் சோதனை செய்து வருகிறோம். சந்திராயன் மிஷன் தொடர்பான பல்வேறு கட்ட சோதனைகள் இஸ்ரோ மையத்தில் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.