நெல்லை: கரையிருப்பு பகுதியைச்சேர்ந்தவர் மாயாண்டி (53). இவர் ஆடு வளர்த்து வருவதுடன் பிற இடங்களில் இருந்து ஆடுகளை வாங்கி, கறிக்காகவும் விற்பனை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூரைச் சேர்ந்த ஒரு சிலர் மாயாண்டியை வீட்டிலிருந்து அழைத்துச்சென்றுள்ளனர்.
அன்றைய தினம் வெகு நேரம் ஆகியும் மாயாண்டி வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பலரிடம் விசாரணை மேற்கொண்டு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி, கரையிருப்பு பகுதியைச்சேர்ந்த மக்கள் நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடைய தொடர்ந்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியைத்தேடி வந்த நிலையில், தாழையூத்து ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள காட்டுப்பகுதியில் மாயாண்டியின் உடல் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணையினைத் தொடங்கினர்.
முதல்கட்ட விசாரணையில் மாயாண்டியை அவரது நண்பர்கள் அழைத்துச்சென்று குடிக்க வைத்து கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நெல்லை மாநகர துணை ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: நெல்லையில் ஒரே நாளில் 2 காவலர்கள் டிஸ்மிஸ் - அதிர்ந்த காவல் துறையினர்!