தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடையடைப்பது தொடர்பாக காவல்துறையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெனிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், விசாரணை கைதிகளாக சிறையில் இருக்கும்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் தாக்குதலில்தான் இரண்டு பேரும் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள், ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை, உயிரிழந்தவர்கள் தரப்பில் விசாரணை நடத்துவதற்காக கோவில்பட்டி ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று (ஜூன் 23) வந்தார்.
ஆனால், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை விசாரணைக்கு வரமாட்டோம் என உறவினர்கள் மறுத்துவிட்டனர். அதாவது அரசு தரப்பில் தற்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளனர். இருப்பினும் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக இன்று மாலை வரை நீதிபதி விசாரணைக்கு உறவினர்கள் தரப்பில் யாரும் வரவில்லை. இதனால் நீதிபதி பாரதிதாசன் மணிக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருந்தார். நீதிபதியின் விசாரணைக்கு பிறகுதான் இருவரின் உடலும் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்படும். இதற்கிடையில் உறவினர்கள் கடைசி வரை வராததால் இரவு 7 மணி அளவில் நீதிபதி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார் நாளை உறவினர்கள் வரும் பட்சத்தில் நீதிபதியின் உரிய விசாரணைக்கு பிறகு இருவரின் உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’நீதிமன்றக் காவலில் தந்தை, மகன் உயிரிழந்தது மிகப்பெரிய மனித உரிமை மீறல்’ - கனிமொழி