திருநெல்வேலி: நாட்டில் 11 மாநிலங்களுக்கிடையே புதிதாக 9 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கத்தையொட்டி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர்கள் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் திமுக தரப்பில் திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான், மேயர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா, முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் 100க்கும் மேற்பட்டோர் கையில் கட்சிக் கொடியோடு கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், திடீரென திமுக தொண்டர்கள் கொடியை உயர்த்தியபடி “கலைஞர் வாழ்க..! தளபதி வாழ்க..!” என பலத்த கோஷம் எழுப்பினர். இதனையடுத்து பாஜக தொண்டர்கள் பதிலுக்கு தங்கள் கட்சி கொடியை உயர்த்தி “மோடி வாழ்க..! மோடி..! மோடி..!” என்று பலத்த கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அடுத்தடுத்து இருதரப்பினரும் தங்கள் தலைவர்களை வாழ்த்தி போட்டி போட்டு எதிர் கோஷம் எழுப்பியதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
அப்போது மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் இந்த கோஷத்தை கேட்டு பதற்றத்தோடு கீழே இறங்கினர். சுமார் 20 நிமிடம் இருதரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிகழ்வை மேடையில் இருந்த இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
பின்னர் விஷயம் வீரியமானதும் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அவர் மைக்கில் பேசும்போது, ‘இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. அரசு நிகழ்ச்சி. எனவே அனைவரும் கொடியை கீழே இறக்குங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் கோஷம் எழுப்பி மோதிக் கொண்டனர். திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா தங்கள் கட்சித் தொண்டர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து ஒரு வழியாக தொண்டர்கள் அமைதி நிலைமைக்குத் திரும்பினார். இந்த களேபேரத்துக்கு மத்தியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார்.
அப்போது பாஜக தொண்டர்கள் ‘பாரத் மாதா கி ஜி’ என்று மீண்டும் கோஷம் எழுப்பத் தொடங்கினர். இருப்பினும் திமுகவினர் பதில் கோஷம் எழுப்பாததால் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் திட்டமிடப்படாத பல முக்கிய பிரமுகர்கள் மேடையில் ஏறியதால் இருக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது நயினார் நாகேந்திரன் தங்கள் கட்சியினரை கீழே இறங்கும்படி கூறினார். அதில் பாஜக மாவட்டத் தலைவர்களான தமிழ்ச்செல்வன் மற்றும் தயா சங்கருக்கு இருக்கை கிடைக்கவில்லை. இதனால் இருவரும் கீழே இறங்கிச் சென்றனர்.
பின்னர் தமிழ்செல்வனை, நயினார் நாகேந்திரன் சமாதானப்படுத்தி மேடைக்கு அழைத்தார். அதேசமயம் வடக்கு மாவட்டத் தலைவர் தயா சங்கர் இருக்கை கிடைக்காததால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விட்டுச் சென்று விட்டார். பின்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்திய பிறகு, மாவட்டத் தலைவர் தயா சங்கர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்தார்.
இதனையடுத்து அவருக்கும் இருக்கை வழங்கப்பட்டது. வழக்கமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கெடுபிடிகளை விதிக்கும் நிலையில், பிரதமர் தொடங்கி வைக்கும் ஒரு திட்டத்துக்கான நிகழ்ச்சியில் அரசியல் கட்சி கொடிகளை அனுமதித்ததும், அதனால் ஏற்பட்ட பிரச்னையும் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளை முகம் சுழிக்கச் செய்தது.
மகளிர் இட ஒதுக்கீடு: நிகழ்ச்சி மேடையில் ஏற்கனவே இருக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நிர்வாகியுமான விஜிலா சத்யானந்த் இருக்கை இல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதை கவனித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எழுந்து நின்று அவருக்கு இருக்கை கொடுக்கும்படி அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் இருக்கை வரும் வரை தமிழிசை சௌந்தராஜன் நின்று கொண்டே இருந்தார். இறுதியில் விஜிலா சத்யானந்தத்திற்கு இருக்கை கொடுத்த பிறகே, ஆளுநர் தனது இருக்கையில் அமர்ந்தார்.