திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் உள்ள சுற்றுப்புற சுவரில் ஏற்கனவே இயற்கை, கலை சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றின் மீது அரசியல் கட்சியினர் போஸ்டர் அடித்து ஒட்டி வந்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கண்டித்து மீண்டும் அந்த சுவரில் ஓவியங்களை வரைய உத்தரவிட்டார்.
அதன்படி, ஒரு மாதமாக நடைபெற்று வந்த சுவரில் ஓவியம் வரையும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இதில் சேரன்மகாதேவி கவின்கலை குழவைச் சேர்ந்த ஓவியர்கள் நெல்லையப்பர் கோயில், முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த ஓவியங்களை வரைந்துள்ளனர்.
அதேபோல் பாரம்பரிய ஓவியங்களான கைத்தறி, சுற்றுப்புற தூய்மை உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனை இன்று (அக.22) மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது, "தற்போது வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மீது போஸ்டர் அடித்து ஒட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் 80 அடியில் மகாத்மா காந்தி ஓவியம்!