திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் 'காட்டு நாயக்கன்' என்ற சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று தலைமுறைகளாக சாதி சான்றிதழ் வழங்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.
இதனால் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் நடுத்தர மற்றும் ஏழை மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அரசு வேலைவாய்ப்பில் கூட இடஒதுக்கீடு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
சாதிச்சான்றிதழ் கேட்டு போனால் தரமறுப்பது மட்டுமல்லாமல், அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வேடிக்கையாக பதிலளிப்பது வேதனையாக உள்ளது என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழ்நாடு அரசு ஏழை மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இதில் தலையிட்டு சாதி சான்றிதழ் வழங்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆகியும் இங்கு ஒரு சமூகத்தினருக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையே மறுக்கப்படுகின்ற நிகழ்வு வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.