நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில், நாங்குநேரியில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக இத்தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விரும்புவதாகவும், இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்குமிடையே கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
![congress - Nanguneri assembly election](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4367883_1.jpg)
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, ”காங்கிரஸ் கட்சியின் உயிர் நாடியான தென் தமிழ்நாட்டை மேலும் பலப்படுத்தவே இந்த கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது குறித்து எந்த தீர்மானமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படாத நிலையில், தவறான தகவலை வெளிப்படுத்திய நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்தவர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.