திருநெல்வேலியில் ஜூன் 23ஆம் தேதி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரியின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் என 100 பேரிடம் காவல் துறையினர் விசாரணை செய்தனர். இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆனநிலையில், இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை திடீரென சிபிசிஐடி காவல்துறை ஆய்வாளர் பிறைச்சந்திரன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர், கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயரின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தடயங்களையும் புகைப்படமாக போலீசார் பதிவு செய்தனர். இந்த ஆய்வு சுமார் ஒரு மணிநேரம் நடந்தது. சிபிசிஐடியில் உள்ள பல்வேறு கொலை வழக்குகளுடன், சம்பவம் ஒத்துப்போகிறதா என்பதை தெரிந்து கொள்ளவே ஆய்வு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.