நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். அப்போது, தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாஞ்சோலை நிலத்தை மாநில அரசு கைப்பற்றி, அங்கே பாடுபட்ட குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதே சமூகநீதி.
திமுகவின் அரசியல் வரலாற்றில் மாஞ்சோலை படுகொலை ஒரு கரும்புள்ளி. திமுகவினர் சமூக நீதி குறித்து பேசுவதில் எந்த அர்த்தமும் கிடையாது என்ற அவர், சமூகநீதி எனும் பெயரில் திமுக தோண்டும் குழியில் அதிமுக விழுந்து விடக்கூடாது என, வலியுறுத்தினார்.
மேலும், 10 சதவிகித இட ஒதுக்கீடு மறுப்பு உட்பட அனைத்தும் தமிழக மக்களுக்கு எதிரான திமுகவின் கொள்கை என்றும், சமூகநீதி என்ற வார்த்தையை பயன்படுத்தி திமுகவினர், அதிமுகவை மிரட்டுவதாகவும் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார்.