திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் திருநெல்வேளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கீதா ஜீவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் பணிகள் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் பதவி பறிக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள 13 கடற்கரை கிராமத்திற்கு ரூ.25 கோடி மதிப்பில் பொன்னன் குறிச்சி தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் உள்ளதாக குற்றசாட்டு எழுகிறது. இதற்கு மாற்று திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாநகராட்சியில் தொய்வு நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை மறு மதிப்பீடு செய்து திட்டம் தயாரித்து ஒப்பந்தம் கோரப்படும். தமிழகம் முழுவதும் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் விரைவில் நிரப்பப்படும். சாதாரண பணியிடங்கள் புற ஆதார அடிப்படையில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ரூ.983 கோடியில் மழை நீர் வடிகால் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது கூடுதலாக 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் 84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வந்தாலும் அதனை முழுமையாக நிறைவு செய்வதில் பல்வேறு சவால்களும் சிக்கல்களும் நிலவி வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும்”