திருநெல்வேலி: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயின்ற பலர் உலகளவில் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். குறிப்பாக மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமில் தொடங்கி சமீபத்தில் இஸ்ரோ சார்பில் சந்திரன் மற்றும் சூரியனுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாடு விஞ்ஞானிகள் வீரமுத்துவேல் மற்றும் நிகர் ஷாஜி வரையில் அரசுப் பள்ளியில் பயின்று தான் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆனால், இத்தகைய அறிஞர்களின் சாதனைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து உரமாய் செயல்பட்டவர்கள் என்ற பெருமை அவர்களது ஆசிரியர்களையே சேரும். இதுபோன்ற பல்வேறு ஆசிரியர்களின் பொறுப்புணர்வு காரணமாக அரசுப் பள்ளிகள் இன்றளவும் பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டும் பாடங்கள் எளிதில் புரியும் வகையில் ஆடல் மற்றும் பாடல் மூலமாகப் பாடம் எடுக்கும் புதுவித யுக்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. மாணவர்களால் அன்புடன் பாக்கியா டீச்சர் என அழைக்கப்படும் இவர், 28 ஆண்டுகளாக செட்டிமேடு கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
2020ஆம் ஆண்டு கரோனா காலத்தில் ஆசிரியை பாக்கியலட்சுமி மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் விதமாகப் பாடங்களைப் பாடலாகப் பாடி வீடியோப்பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் அந்த யூடியூப் லிங்கை தனது மாணவர்களின் பெற்றோர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி, அதன் மூலம் கரோனா காலத்தில் வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் பாக்கியா டீச்சரிடம் பாடம் படித்து வந்துள்ளனர்.
கரோனா அலை ஓய்ந்த பிறகும் தற்போது வரை பாக்கியா டீச்சர் நேரம் கிடைக்கும்போது வீட்டில் வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்காகப் பாடங்களைக் குறிப்பு எடுத்துக்கொண்டு அதற்கேற்ப ராகங்களைத் தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிடுகிறார்.
மேலும் கடந்த மே மாதம் முதல் பாக்கியா டீச்சர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கணக்கு தொடங்கி தனது வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார். தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியா டீச்சருக்கு மாணவர்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்துள்ளது.
பாக்கியா டீச்சர் குறித்து 4ஆம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினியிடம் கேட்டபோது, "எங்க டீச்சரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க எங்களுக்கு புரியும்படி ஆடி, பாடி அழகா பாடம் சொல்லித்தருவாங்க. எங்ககிட்ட கோவமே படாம எதுனாளும் அன்பா சொல்லிக்கொடுப்பாங்க" என்று மழலை மொழியில் பெருமையாகக் கூறினார்.
இது குறித்து ஆசிரியை பாக்கியலட்சுமி கூறும்போது, "நான் 28 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கரோனா காலத்தில் மாணவர்களுக்கு யூடியூப் மூலம் ஆடல் பாடலுடன் பாடம் சொல்லிக் கொடுக்க தொடங்கினேன். 1980களில், எனது ஆசிரியர் எனக்கு கற்றுக் கொடுத்த ராகத்தோடு பாடங்களைப் பாடலாக பாடிக் கொண்டே சொல்லிக் கொடுத்து வருகிறேன்.
ஆடல் பாடலுடன் பாடம் நடத்தும்போது மாணவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகுவார்கள், அதன் மூலம் அவர்களுக்குப் பாடம் எளிதில் புரியும், எனது மகள்கள் தான் எனக்கு யூடியூப்பில் கணக்கு தொடங்கித் தந்தனர். எனது வீடியோவை பார்த்து பலர் எனக்கும் இப்படி ஒரு டிச்சர் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லையே என பெருமையோடு கமெண்ட் செய்தனர். சிலர் நெகட்டிவ் கமெண்ட் கொடுப்பார்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. அடுத்த கட்டமாகக் கதை சொல்லி அதன் மூலம் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் கண்டெடுப்பு; சாலைப் பணியால் அழியும் அவல நிலை!