தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. 71அடி உயரம் கொண்ட வைகை அணையில், ஆண்டு தொடக்கத்திலேயே நீர்ப்பிடிப்பு பகுதியான மூல வைகையில் பெய்த தொடர்மழை மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்பட்ட நீரால் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
இதனால் கடந்த ஜனவரி 14 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 66 அடியை தாண்டி நீரின் அளவு உயர்ந்ததால், வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையில் 69 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டு, அதன்பிறகு உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அனைத்து பகுதிகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் சென்று விட்டதால் அணையில் தண்ணீரை தேக்கி, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டனர்.
இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும், அணைக்கு நீர்வரத்து 2,352 கன அடியாக உள்ளது. இதனிடையே அணையின் பாதுகாப்பு கருதி, 2,139 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 1,200 கன அடி நீர் மின்நிலையம் வழியாக திறக்கப்பட்டு பாசன பகுதிக்காக ஆற்றின் வழியாகவும், பேரணை இணைப்பு கால்வாய் பகுதிக்கு 750 கன அடி தண்ணீரும், மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீரும் செல்கிறது. இது தவிர உசிலம்பட்டி, நிலக்கோட்டை தாலுகாவிற்கு 58 ஆம் கால்வாய் வழியாக 120 கன அடி என மொத்தம் 2,139 கன அடி நீர், இருப்பை பொறுத்து வெளியேற்றப்டுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைகை அணை கட்டப்பட்ட 60 ஆண்டு காலத்தில், இதுவரை 5 முறை மட்டுமே முழுக்கொள்ளவான 71 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு வைகை அணையில் 71 அடி வரையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முழுக்கொள்ளளவான 71 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதகையில் உயிருக்குப் போராடிவரும் யானை