தேனி மாவட்டம் மேகமலை வன உயரின சரணாலயத்தின் கிழக்கு வனச் சரகத்துக்குட்பட்ட வெண்ணியாறு வனப்பகுதியானது. அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த இந்த மலையில் தேக்கு, தோதகத்தி உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் இந்த வனப்பகுதி திகழ்கிறது.
இந்த பகுதியில் நேற்று(அக்-31) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனத்திலிருந்த சிலர் அவர்களைக் கண்டதும் தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள தோதகத்தி மற்றும் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கீழே கிடந்ததுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வனப்பகுதிக்குச் சென்ற உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ், வனச்சரகர் அருண்குமார் மற்றும் வனப்பாதுகாப்பு படையினர் வெட்டப்பட்ட மரத் துண்டுகளைக் கைப்பற்றி கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திற்குக் கொண்டு வந்தனர். அதன் மதிப்பு ஒரு லட்சத்திற்கும் மேல் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.