தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இது சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால் இந்த அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் நாள்தோறும் வருகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் ஏரித்தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் அருவியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாகத் திகழ்கிறது.
இதனிடையே தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியின் நீர் வரத்து சீராகும் வரை இந்த தடை நீடிக்கும் என வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
நீர்வரத்து குறையாததால் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து 6வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.