தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, பிரசித்திப்பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கிவருகிறது. இந்தச் சுருளி அருவியில் குளிப்பதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதுண்டு. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுருளி அருவி அருகே பூத நாராயணன் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து கொள்ளையடிப்பதற்காக அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அங்கு நுழைந்துள்ளனர்.
அப்போது, கோயிலில் அய்யம்பட்டியைச் சேர்ந்த பூசாரி மலையன் என்ற பாண்டியன் (70), பாலசுப்பிரமணி (59) இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கோயிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த பூசாரி, அவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். இதனையடுத்து, அந்த இருவரும் கம்பியைக் கொண்டு பூசாரியின் தலையில் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பூசாரி மலையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவர்களை தடுக்க முயன்ற பாலசுப்பிரமணியும் பலமாகத் தாக்கப்பட்டு காயத்துடன் இருந்துள்ளார். இருவரையும் தாக்கியவர்கள் உண்டியலை உடைப்பதை கைவிட்டு விட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகவும், படுகாயமடைந்த பாலசுப்பிரமணியை சிகிச்சைக்காகவும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு கொள்ளையடிக்க முயன்றவர்களை தேடிவருகின்றனர். முக்கியச் சுற்றுலாத்தலத்தில் உள்ள கோயிலின் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.