தேனி : தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன்-கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்தார்.
அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு கிராமத்திற்கு உட்பட்ட இடத்தில் ரூ.265 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டப்படும் எனக் கூறி, இதற்காக முதற்கட்டமாக ரூ.94.72கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து புதிய கட்டிடம் நிறுவப்படும் வரையில் தற்காலிகமாக பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்வி வளாகத்தில் தேனி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது.
மேலும் 2020-2021 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்தநிலையில் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ள 286 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (டிச.3) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதில் புதிய கட்டிடம் மற்றும் கட்டுமானத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், அதன் மாதிரி வரைபடங்கள் உள்ளிட்டவைகளை துறைச் சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அதே பகுதியில் ரூ.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு சட்டக்கல்லூரி மற்றும் போடந்திரபுரம் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மா திருமண மண்டபம் ஆகியவை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ.ஜக்கையன் உள்பட பல்வேறு அரசுத்துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: புரெவி புயல் எதிரொலி ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை