தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. மஞ்சளாறு அணைப் பகுதியிலிருந்து கும்பக்கரை பகுதியிலுள்ள மாந்தோட்டத்தில் பணிக்காக உர மூட்டைகள், கூலியாள்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது.
அப்போது அந்த வேன் தர்மலிங்கபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது வேன் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பாண்டி (27), மணிகண்டன் (27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவ்வழியாக வந்த பொதுமக்கள் இது குறித்து தேவதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அப்போது, ஐயர் (41) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஒன்பது பேர் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த நான்கு பேர் மேல் சிகிச்ச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
காவல் துறையினர் இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தோட்ட வேலைக்குச் சென்ற விவசாய கூலியாள்கள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.