கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி பகுதியில் பெய்த கனமழையால், கடந்த ஆக. 6ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளா்களின் குடும்பத்தினர், அவா்களது வீடுகளில் தங்கியிருந்த உறவினா்கள் என 80க்கும் மேற்பட்டோர் சிக்கினா்.
தொடர்ந்து, இந்தக் கோர விபத்தில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில், 10 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். 15 நாட்களாக நடைபெற்று வரும் இந்த மீட்புப் பணியில் மண்ணில் புதையுண்ட 25 ஆண்கள், 23 பெண்கள், ஆறு சிறுவா்கள், ஒன்பது சிறுமிகள், ஆறு மாத, இரண்டு மாத கைக்குழந்தைகள் என இதுவரை மொத்தம் 65 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன், பெட்டிமுடி பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டித் தர வேண்டும். ஒரு ஏக்கர் நிலம் வழங்கி, கல்வி, சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முறையிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்' - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!