உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொது சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்காக காய்கறி, பால், மளிகை பொருள்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் மட்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. ஆனால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தி அதிக அளவில் வெளியே வந்து சாலைகளில் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தேனியில் பொருள்கள் வாங்க குவியும் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், மளிகை போன்ற பொருள்கள் அனைத்தும் இல்லத்திற்கே நேரடியாக விநியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது
இதனை கட்டுப்படுத்தும் விதமாக கம்பம் நகரில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து மற்ற அனைத்து முக்கிய வீதிகளையும், தெருக்களையும் காவல்துறை கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைத்து தடுத்துள்ளனர். இதையும் மீறி இருசக்கர வாகனங்களில் வெளியே வருபவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் இந்த கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கம்பம் நகர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : மாநிலங்கள் வாரியாகக் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நிலவரம் என்ன?