தேனி மாவட்டம் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் நான்கு செவிலியர்கள், பண்ணைப்புரம் பேரூராட்சி அலுவலக ஓட்டுநர், தேனியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக ஓட்டுநர் உள்பட இன்று ஒரே நாளில் 205பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 909ஆக அதிகரித்துள்ளது. பெரியகுளத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டி, சின்னமனூர் அருகே வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி,கூடலூரைச் சேர்ந்த 62 வயது முதியவர் என மூன்று பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 6 ஆயிரத்து 865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 929 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நோய்த் தொற்றின் பாதிப்பை போன்று உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருப்பதால் தேனி மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.