தேனி மாவட்டம் குரங்கணி அருகே உள்ளது கொட்டடக்குடி ஊராட்சி. இங்கு முதுவார்க்குடி, முட்டம், சென்ட்ரல் ஸ்டேசன், டாப் ஸ்டேசன் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. மா, இலவம், எலுமிச்சை உள்ளிட்ட விவசாயப் பணிகளை இப்பகுதி பழங்குடியின மக்கள் செய்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை போடியில் இருந்து பேருந்து மூலம் வாங்கி வந்து குரங்கணியில் இருந்து குதிரை, கழுதைகள் உதவியுடன் கொட்டடக்குடி ஊராட்சிக்கு எடுத்து செல்வார்கள்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் இந்த மலை கிராம மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனை அறிந்த தேனி மாவட்ட அதிமுகவினர், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தேனி எம்.பி ஓ.பி. ரவீந்திரநாத்குமார் ஆகியோரது கவனத்திற்கு தெரிவித்தனர். ஏற்கனவே முதல் கட்டமாக அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக ஓ.பி. ரவீந்திரநாத்குமார் தனது சொந்த நிதியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை குதிரை, கழுதைகள் மூலம் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பிவைத்தார். பின்னர் அப்பகுதிக்கு சென்ற அவர், நேரடியாக மக்களிடம் பொருட்களை வழங்கினார்.
இதையும் படிங்க: ஆரோக்கியம்' திட்டம் மூலம் கபசுரக் குடிநீர் வழங்கல்!