டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அமமுகவில் இருந்து விலகிய, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மாவட்ட அமமுக செயலாளருமான தங்கதமிழ்செல்வன் சில தினங்களுக்கு முன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் இன்று கம்பத்தில் உள்ள திமுக தேனி மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் இல்லத்தில் அவரைச் சந்தித்து திமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேனி மாவட்டம் போடியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாபெரும் மாபெரும் பொதுக்கூட்டம் விரைவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் அமமுக, அதிமுக மற்றும் தனது ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைய உள்ளனர். ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துவிட்டது. பாஜகவின் கைக்கூலியாகவே அதிமுக மாறிவிட்டது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சி உருவாகியிருக்கக் கூடாது. அதிமுகவை மீட்டெடுக்க வந்ததாகக் கூறிய தினகரன், அந்த கட்சிக்கே தலைமை தாங்கும் முடிவுக்கு வந்தது தனக்குப் பிடிக்காததால், அதிலிருந்து விலகி திமுகவில் இணைந்தேன். வருங்காலத்தில் திமுகதான் நீண்ட நெடிய முன்னேற்றத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொடுக்கும். தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கு ஸ்டாலின் தலைமையில் பெரும் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெறுவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நேரத்திற்கு ஒன்றைப் பேசுபவர் ஜெயக்குமார். பல வகையில் பல மாறுபட்ட கருத்துக்களைப் பேசுபவர். இதே ஜெயக்குமார் தான். திமுகவில் இணைந்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு. அதிமுகவினர் 90% பேர், அமமுகவில் இருப்பதாகக் கூறி பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தேர்தல் முடிவில் ஒரு விழுக்காடு கூட இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் திமுக 52% வெற்றி பெற்றிருப்பதால் மக்கள் ஆதரவு திமுகவிற்கு இருப்பதால், அந்த நம்பிக்கையில் இணைந்தேன், என்றார்.