தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதில், ஆண்டிபட்டி பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆண்டிபட்டியில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன், வட்டாட்சியர் சந்திரசேகர், காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், ஆண்டிபட்டியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி நாளை முதல் 10 நாள்களுக்குக் கடைகள் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்தார். அதனடிப்படையில் நாளை (ஜூலை 8) முதல் வரும் 17ஆம் தேதி வரையில் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மருத்துவமனை, மருந்து கடைகள் தவிர்த்து, அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறி, மளிகை, பெட்ரோல் உள்பட அனைத்துல் கடைகளும் அடைக்கப்படவுள்ளன.
மேலும் ஆட்டோ, டாக்சி, இருசக்கர வாகனங்கள் இயங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை இருப்பிடத்திற்கே சென்று விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இன்று மாலை ஐந்து மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி கடைகள் திறந்துவைத்திருக்கும் வணிகர்கள், ஊரடங்கில் தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.