மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கரையான்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன்(55). இவருக்கு முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் விவகாரத்து பெற்று 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்துப்பாண்டி, பூபாண்டி என்ற மகன்களும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் குபேந்திரன் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை ஆற்றின் கரையோரம் குடிசை போட்டு தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு அவருக்கு குள்ளபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு குடும்பம் நடத்தியும் வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு குபேந்திரனின் ஒரு கால் அகற்றப்பட்டு அவர் வீட்டில் படுத்தபடியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை குபேந்திரன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய வைகை அணை காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணையை தொடங்கினர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சொத்திற்காக தந்தையை மகனே கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து உசிலம்பட்டி அருகே வாகைகுளம் பகுதியில் தலைமறைவாக இருந்த குபேந்திரனின் மூத்த மகன் முத்துப்பாண்டியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, எனது தந்தை குபேந்திரனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் எங்களின் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நாங்கள் பலமுறை அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தும் வரவில்லை. இதனால் அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் பறிபோய்விடும் என்ற பயத்தில் கொலை செய்தேன் என்று கூறினார்.
பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.