தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, புதிய ஆறு வேலைகளுக்கான நிதியை பொது நிதியில் இருந்து எடுத்து செலவு செய்திட ஒன்றிய பெருமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட வேலைகள் அனைத்தும் ஏற்கெனவே முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தற்போது மீண்டும் அதே வேலையை செய்ய நிதி ஒதுக்கிடு செய்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஆண்டிபட்டி ஒன்றியக்குழு உறுப்பினர்களில் 7 பேர் இன்று (டிச.9) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.
இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் கூறுகையில், "கடந்த 2018 -19ஆம் ஆண்டில் தேனி மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் செலவில் ஜி.உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இராமலிங்கபுரத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
அதேபோன்று பல்வேறு ஊர்களில் உள்ள 18 கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்துவதற்காக தீர்மானம் இயற்றியுள்ளனர்.
இந்த 18 கட்டடங்களை இடிப்பதற்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவில்லை. இதுதவிர நடந்து முடிந்த 2 ஒன்றியக்குழு கூட்டத்திலும் திமுக, அமமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சியினர் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர்" எனக் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: உலகளவில் தமிழனின் பெயரைக் கெடுத்தவர் ஆ.ராசா - அமைச்சர் செல்லூர் ராஜூ