உலக நாடுகளை சூறையாடிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் கரோனா குறித்த அச்சமே இல்லாமல் சாலையில் சுற்றுவது, கடைக்குச் செல்வது, பொது இடங்களில் ஒன்றுக்கூடுவது போன்ற செயல்களை தினசரி வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பாதுகாப்பு பணியிலிருக்கும் காவலர்கள், தங்களால் முடிந்தவரை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவது, வாகனத்தில் வீணாக சுற்றுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, அபராதம் வசூலிப்பது, தோப்புக்கரணம் போட வைப்பது, ஒரே இடத்தில் நிற்க வைக்கிறது என அனைத்து முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் மக்கள் உலாவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசு இணைந்து கரோனா குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு காணொலிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் துறையினர், நடிகர் ரஜினியின் பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடலுக்கு டப்பிங் கொடுத்து ஊரடங்கு உத்தரவு, கரோனா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். நீண்ட பேச்சை மட்டும் விழிப்புணர்வாக கேட்டு வந்த மக்களுக்கு, பாடல் விழிப்புணர்வு வெகுவாக கவர்ந்தது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவலர் மணிகண்டனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: கரோனா - போப் ஆண்டவர் தனிமையில் பிரார்த்தனை!