சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஏற்றிய மத்திய அரசை கண்டித்து தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நகர், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என சுமார் 300பேர் வரை பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வம் தலைமையிலான திமுகவினர், மதுரை சாலையிலிருந்து ஊர்வலமாக கேஸ் சிலிண்டரை பாடையில் கட்டி எடுத்துவந்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.
இதேபோல திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்ததமிழ்செல்வன், பெரியகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணக்குமார் உள்ளிட்டோர் தலைமையிலான திமுகவினர், சமையல் அடுப்பு, சிலிண்டரை எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு
தீப்பற்றக்கூடிய அபாயகரமான சிலிண்டரை பொதுமக்களுக்கு இடையூறாக எடுத்து வந்து 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், ஒன்றிய பொறுப்பாளர் ரத்னசபாபதி, தேனி வழக்கறிஞர் செல்வம் உள்பட சுமார் 250க்கும் மேற்பட்டோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் தேனி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்!