தேனி அருகே அரண்மனை புதூரை சேர்ந்த மீனா என்பவர் பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் 5 மாடல் மொபைலை ஒரு வருட உத்தரவாதத்துடன் வாங்கி உள்ளார்.
இந்நிலையில் வாங்கி பயன்படுத்திய ஆறாவது மாதத்திலேயே அந்த ஐபோன் பழுதாகி மீண்டும் அதை ஆன் செய்ய முடியாத நிலைக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மொபைல் வாங்கிய பூர்வீகாவில் ஏற்பட்ட பழுதை நீக்கி தர கொடுத்தும் பழுது நீக்கி தரப்படாத நிலையில் மீனாவுக்கு உரிய பதிலும் அளிக்கப்படாமல் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் போலியாக ஒரு வருட உத்தரவாதம் எனக் கூறி ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனா தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய உறுப்பினர்கள் மனுதாரர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் நுகர்வோரை பாதிப்புக்கு உள்ளாகியதும் ஏமாற்றப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நுகர்வோரான மீனாவிற்கு பூர்விகா மொபைல்ஸ் இரண்டு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், புதிய ஆப்பிள் ஐபோன் 5 மொபைல் போன் ஒன்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுந்தர் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் தள்ளுவண்டி கடையில் 5,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சி...