தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை எழில் சூழ்ந்த அழகிய பகுதியாகும். அங்கு கோடைக்கால வெப்பம் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் வனத்தில் காட்டுத்தீ ஏற்படுவது உண்டு. அதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு தற்போது கோடை தொடங்குவதற்கு முன்பாக, குளிர் காலத்திலேயே காட்டுத்தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. பெரியகுளம்- கும்பக்கரை அருவிக்கு அருகே உள்ள செலும்பு வனப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 100 ஏக்கரில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் பல வகையான மூலிகை மற்றும் அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றன.
காடுகளில் உள்ள உயிரினங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே நவீன தீத்தடுப்பு கருவிகளைக் கொண்டு வனத்துறையினர் காட்டுத்தீயை உடனே கட்டுப்படுத்தி வன வளத்தைக் காத்திட வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.