தேனி அருகே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் அறக்கட்டளைக்குச் சொந்தமான கோயில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அதனை மீட்டுத்தரக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் கிராம நிர்வாக அலுவலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அருகே உள்ள சுக்குவாடன்பட்டியில் ஒரு சமுதாயத்தினரின் அறக்கட்டளைக்கு சொந்தமான கோயில் உள்ளது. தற்போது இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான, சுமார் 3 சென்ட் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் கோயில் விழாவின் போது பொங்கல் வைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுதாகவும் கூறப்படுகிறது.
ஆகையால், அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தருமாறு தேனி காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தனர். மேலும் பத்திரப்பதிவு படி, கோயில் நிலத்தை அளவீடு செய்து தருமாறு, முறையாக அரசுக்கு பணம் செலுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நில அளவையருக்கு மனு கொடுத்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், நிலத்தை அளந்து தர வருவதாகக் கூறிய நில அளவையர், இதுவரை வராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், உடனடியாக நிலத்தை அளக்க நில அளவையர் வர வேண்டும் என்றும் கூறி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் அந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் வந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அந்த அறிவுரையை ஏற்க மறுத்த மக்கள், நில அளவையர் வரும் வரை இந்த காத்திருப்புப் போராட்டம் தொடரும் என தெரிவித்து, பின்னர் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலரையும் (VAO) முற்றுகையிட்டனர்.
மேலும் நில ஆக்கிரமிப்பு செய்த நபரிடம் கையூட்டு பெற்றுவிட்டு தான், நில அளவையர் வர மறுப்பதாகக் கூறியும் விஏஓவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, நில அளவையரின் இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர், மீண்டும் ஒரு தேதியில் நிலத்தை கண்டிப்பாக அளந்து தருவதாகக் கூறி உத்தரவாதம் அளித்தார். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: Palladam family murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா? பின்னணி என்ன?