தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் காளிராஜ் - பழனியம்மாள் தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 6 வயது சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி வீட்டின் அருகே கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டியின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்ட தொட்டியின் மேற்புறம் வைக்கப்பட்டிருந்த அரசின் சிமெண்ட் கல்வெட்டு சிறுமியின் மீது விழுந்தது. இதில் சிறுமிக்கு இடது கால் எலும்பு முறிந்து, தலையின் முன் பக்கம், பின்பக்கத்தில் பெரிய வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் மட்டும் 32 தையல்கள் போடப்பட்டன. பின்னர், சிறுமிக்கு பூரண குணமடைந்துவிட்டதாகக் கூறி அரசு மருத்துவமனை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பியது. இதனிடையே, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை சந்தித்து பெற்றோர் புகார் அளித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில், தொட்டியின் மேல் கனமான சிமெண்ட் கல்வெட்டு வைத்துள்ளார்கள். அதனை முறையாக சிமெண்ட் வைத்து பூசாமல் தொட்டி மீது நிற்க வைத்துள்ளனர். அதனால்தான் என் மகள் மீது கல் வெட்டு விழுந்தது. இதுவரை எந்த அலுவலர்களும் இந்த விபத்து குறித்து விசாரிக்கவில்லை. மேலும் நடவடிக்கை எடுக்க ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. என் மகள் குணமாவதற்கு முன்பாகவே அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற சொல்லி விட்டார்கள், என்றார்.
இதையும் படிங்க: கூண்டில் சிக்காமல் டிமிக்கி கொடுக்கம் சிறுத்தை - அச்சத்தில் மக்கள்!