தேனியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இன்று (டிச.24) செய்தியாளர்களை சந்தித்த அவர், “ திமுக தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகிற டிசம்பர் 31ஆம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு திமுக பொருளாளர் டி. ஆர். பாலு வருகை தர உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 10ஆம் தேதிக்குள் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேனிக்கு பரப்புரை பயணம் மேற்கொள்வார். சட்டப்பேரவைத் தேர்தலில் தேனியில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும். அதற்காக தீவிரமாக பரப்புரை செய்து வருகிறோம்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேரளாவில் ரூ.2000 கோடிக்கு சொத்து வாங்கியிருப்பதாக அம்மாநிலத்தின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
அதே குற்றச்சாட்டை கூறும் என் மீதும் எந்தவித பதில் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்தே ஊழல் செய்து சேர்த்த பணத்தில் ஓ.பி.எஸ் கேரளாவில் சொத்து வாங்கி இருப்பது உறுதியாகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து வருமான வரித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணை முதலமைச்சரின் ஊழலை எடுத்துரைக்கும் வகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக பரப்புரை மேற்கொள்ளும். அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து 97 பக்க அறிக்கையை ஆளுநரிடம் அளித்தது போல, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் சம்பந்தமாக இரண்டாம் கட்ட பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் வழங்க உள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், மினி கிளினிக் திறந்து வருவது அரசின் ஊழல் குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காகவே.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது என கூறுவதற்கு பதிலாக 2,500 கோடி வழங்கியுள்ளோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் பொதுமக்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடியே வழங்கினால் கூட இந்த தேர்தலில் அதிமுக அரசுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் அனுமதியின்றி தனி விமானத்தில் மொரீஷியஸ் தீவிற்கு தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திர நாத்குமார் பயணம் மேற்கொண்டார். ஊழல் பணத்தை பதுக்குவதற்காக தான் தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திர நாத்குமார் அங்கு சென்றுள்ளார் என நாங்கள் குற்றம்சாட்டி வந்தோம்.
தற்போது வரை அதற்கும் ஓ.பன்னீர் செல்வமோ, அவரது மகன் ரவீந்திர நாத்குமாரோ எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.
சட்ட மேதை அம்பேத்கரால் முடியாத, பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கும் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றி காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி.
அவரது ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. அடுத்து வந்த முதலமைச்சர்கள் அதனை விரிவாக்கம் செய்திருக்கலாமே தவிர, புதிய திட்டங்களை செயல்படுத்தவில்லை.
எனவே, திராவிட கட்சிகள் குறித்த சீமானின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே பனிப்போர் நடக்கவில்லை, நேரடியாகவே போர் நடைபெற்று வருகிறது.
சசிகலா விடுதலை ஆன பிறகு, அதிமுகவின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு பிறகு இவர்களை பற்றிய விபரங்களை ஊடகங்கள் முன் தெரிவிப்பேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க : புன்செய்புளியம்பட்டி வார சந்தையில் ஆடு விற்பனை மந்தம்