நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல் துறையினர் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் ராகுல், பாலாஜி, பிரவின் மற்றும் சத்யசாய் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த அபிராமி என கண்டறியப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிட் மற்றும் பிரவின் அவரது தந்தை சரவணன் ஆகிய நான்கு பேரும் சிபிசிஐடி காவல் துறையினர் தேனிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
இதனைத்தொடர்ந்து மாணவி அபிராமி அவரது தாயாருடன் அழைத்து வரப்பட்டார். அவர்களிடம் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
அபிராமியின் தந்தை மாதவனும் விசாரணைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் காலையில் நடைபெற்ற விசாரணையில் மாணவர்கள் ராகுல், பிரவின் மற்றும் அவர்களது தந்தை டேவிஸ், சரவணன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிய உள்ளதாகவும் சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்தனர். மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை மாதவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆள்மாறாட்டம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.