நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் உதித்சூர்யா, ராகுல், பிரவீன் ஆகிய மாணவர்களையும், அவர்களது தந்தைகளையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான் என்ற மாணவன் நேற்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரது தந்தை முகம்மது சபியை கடந்த இரண்டு நாட்களாக தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் ஆள் மாறட்டம் செய்ய இடைத்தரகராக செயல்பட்ட திருப்பத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இடைத்தரகரை வேலூர் சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இவர் அரசு மருந்தகத்தில் பணிபுரிந்து கொண்டு, இடைத்தரகராகவும் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கோவிந்தராஜ் நேற்றிரவு தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
மேலும், அவரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். இவரை விசாரித்தால் வேறு யாரேனும் இடைத்தரகர்கள் உள்ளார்களா? இதுவரை ஆள்மாறாட்டத்தில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர், முக்கிய இடைத்தரகரான கேரளாவைச் சேர்ந்த ரஷீத் எங்கு உள்ளார் என்பன குறித்த கூடுதல் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: ”தப்பிய மகன், சிக்கிய தந்தை”