கம்பம் நந்தனார் காலனியை சேர்ந்தவர்கள் சிவா-சாந்தி தம்பதி. இவர்களது மகன் வினோத்குமார் (21) என்பவர் திண்டுக்கலில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்துவந்துள்ளார். அங்கு ஆலையில் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சில தினங்களுக்கு முன் அப்பெண்ணை அழைத்துக்கொண்டு சின்னமனூர் அருகே பூமலைக்குண்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார் வினோத்குமார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் வீட்டார், வினோத்குமாரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது பெண்ணை அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து சொந்த ஊருக்கு சென்ற வினோத்குமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை கம்பம் - கூடலூர் சாலையில் உள்ள ஒரு புளிய மரத்தில் வினோத்குமார் பிணமாக தொங்குவதாக, அவ்வழியே சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கழுத்தில் கயிற்றுடன் மரத்தில் பிணமாக தொங்கிய வினோத்குமாரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக கம்பம் நகர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.