தேனி மாவட்டம் போடி பகுதியில், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், போடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபரை க்யூ பிரிவு காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதனையடுத்து போடி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த சுதர்ஷன் என்பவரது மகன் டாய்ஜோஸ் (21) என்பது தெரியவந்தது.
பின்பு, அவரிடமிருந்து ரூ.53 ஆயிரம் மதிப்பிலான 106 தாள்கள் கொண்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதன் பின்னணியில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர், பிற பகுதிகளில் இதுபோல கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனரா என்பது குறித்து க்யூ பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்க்கில் கள்ள நோட்டு மாற்றம்