தேனி: பல்லவராயன் பட்டியில் வருன் 15ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தேதி மற்றும் வீரர்கள் பதிவு செய்வதற்கான இணையதளத்தை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்வி சஜீவனா அறிவித்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்வி சஜீவனா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பல்லவராயன்பட்டியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் https://theni.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். மாடுபிடி வீரர்கள் தங்களது புகைப்படம், வயது சான்றிதழ், இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல் மாட்டின் உரிமையாளர்கள் தங்களது பெயர், காளையுடன் உரிமையாளர் இருக்கக்கூடிய புகைப்படம், உரிமையாளரின் ஆதார் மற்றும் கால்நடை மருத்துவரிடம் பெற்ற காளைக்கான உடல் தகுதி சான்று ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்கள் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் 11ஆம் தேதி இரவு 8 மணிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பாக கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றினை வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான டோக்கன் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்வி சஜீவனா தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேனி சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை!