நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா விவகாரம் தொடர்பாக இன்று காவல் துறையினர் மருத்துவக் கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சரிவர ஆவணங்களை பார்க்காமல் உதித்சூர்யா எவ்வாறு கல்லூரியில் சேர்க்கப்பட்டார், முறைகேடாக மாணவர் சேர்ந்தது குறித்தும், புகார் கிடைத்தும் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளிக்காமல் தாமதத்திற்கான காரணம் என்ன? ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் உதித்சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனுக்கும், முதல்வருக்குமான தொடர்பு என்ன? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் விசாரணை நடத்திய பின்பு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்களிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.