தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகேவுள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரமேஷ் (45). இவரது மனைவி தெய்வபாக்கியம் (36). இவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் வழங்கிய 15 சவரன் நகை, பணத்தை தனது குடிப்பழக்கத்தால் அழித்த ரமேஷ், மீண்டும் 50 ஆயிரம் ரூபாயை பெற்றோர் வீட்டில் வாங்கி வரும்படி தெய்வபாக்கியத்தை துன்புறுத்தி, சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இதனால், மனம் வெறுத்த தெய்வபாக்கியம் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக் கொண்டார். பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி அக்டோபர் 21ஆம் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கடமலைக்குண்டு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (498ஏ) கீழ் ரமேஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதன் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தேனி மகிளா நீதிமன்றத்தில் இன்று (நவ.12) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார். மேலும், அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து தகுந்த பாதுகாப்புடன் ரமேஷை மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை