தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் அமைந்துள்ளது இயற்கை எழில்கொஞ்சும் அம்பரப்பர் மலை. இங்கு வான்வெளியில் இருந்து கண்களுக்குப் புலப்படாத நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான நியூட்ரினோ ஆய்வு மையம் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் அமைக்க இருப்பதாக 2009ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.
இதற்கு முதற்கட்டமாக ஆய்வு மையம் அமைய இருக்கும் இடத்தைச் சுற்றி வேலிகள், சுமார் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆய்வு மையம் அமைக்க தடையாணை பெற்றார். மேலும், தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் அத்திட்டம் அமைப்பதற்கான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், மத்திய அணுசக்தித் துறை நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனையறிந்த தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.