தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி அனைத்து இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. திண்டுக்கல், தேனி உள்பட மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் முக்கிய அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. இதன் மொத்த கொள்ளளவான 57 அடியில் 51 அடியை எட்டிய நிலையில் அணை நீர்வரத்து 478 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரத் தொடங்கியுள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆற்றங்கரையோரப் பகுதிகளான கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, கெங்குவார்பட்டியில் உள்ள மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் இன்று (அக் 21) மாலை நிலவரப்படி நீர் இருப்பு 35.01 மி.கன அடியாகவும் நீர்வரத்து 478 கனஅடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றம் ஏதும் இல்லாததால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியவுடன் இரண்டாம் கட்டமாக 55 அடியை எட்டியதும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை