தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் வசித்துவருபவர்கள் செல்லராமு, இராமசாமி. விவசாயக்கூலிகளான இவர்கள் நேற்று (டிச. 06) மாலை நண்பர்களுடன் கல்லாற்றில் குளிக்கச்சென்றுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழையால் கல்லாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவற்றில் நண்பர்கள் 4 பேர் ஆங்காங்கே இருந்த மரக்கிளைகளைப் பிடித்து உயிர்தப்பி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புப் படை வீரர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ராமசாமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட செல்லராமுவை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்புப் பணி நிறுத்தப்பட்டு இன்று (டிச. 07) காலை மீண்டும் தொடங்கியது. இதில் பெரியகுளம் கல்லாற்றில் இழுத்துச் செல்லப்ட்ட செல்லராமு 15 கி.மீ. தொலைவில் உள்ள மேல்மங்களம் வராகநதி தடுப்பணையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக பெரியகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
குளிக்கச் சென்ற நண்பர்கள் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நன்னிலத்தில் முகாம்களை ஆய்வுசெய்த உணவுத் துறை அமைச்சர்!