தேனியில் விவசாயிகளின் மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் கௌதம், மேகமலை வன உயிரின சரணாலயக் காப்பாளர் சச்சின் போஸ்லே, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தேவாரம் பகுதி விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி ஒற்றை யானையை விரைந்து பிடித்திட வேண்டும், மேகமலை வனப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும் மலை மாடுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் அனுமதி சீட்டை காலம் தாழ்த்தாமல் விரைந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அலுவலர்களிடம் முன்வைத்தனர்.
இதையடுத்து கூட்டம் நிறைவடையும் நேரத்தில் மலை மாடுகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரமாக அலுவலக கூட்டரங்கில் தரையில் அமர்ந்தபடியே விவசாயிகள் அலுவலர்களிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து 10 நாட்களுக்குள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் வாய்மொழியாக உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை வனத்துறை அளித்து வரும் மாடுகளுக்கான மேய்ச்சல் அனுமதிச் சீட்டுக்காக ஜூன் மாதத்தில் விண்ணப்பம் கோரியிருந்தோம். செப்டம்பர் மாதத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 15 நாட்களுக்குள் அனுமதி சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட மலை மாடுகளின் மேய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. காலம் தாழ்த்தாமல் மலை மாடுகளுக்கு வழங்கப்படும் மேய்ச்சல் அனுமதிச் சீட்டினை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் வன அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி புத்தகத் திருவிழா: தேனீக்களாய் மொய்த்த மாணாக்கர்கள்...