தேனி சிவாஜி நகரைச் சேர்ந்த மாயாண்டி - ராஜாமணி தம்பதிக்கு பாண்டியராஜன், தனபாண்டியன், சுந்தரபாண்டியன் என மூன்று மகன்கள் இருந்தனர். இதனிடையே 2016ஆம் ஆண்டு சகோதரர்கள் பாண்டியராஜன், தனபாண்டியன் ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிகேட்ட சுந்தரபாண்டியனை, அவரது சகோதரரான பாண்டியராஜன் அரிவாளால் தாக்கியுள்ளார்.
இதில் சுந்தரபாண்டியன் இறந்துவிடவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி தேனி எரிவாயு தகனமேடையில் பாண்டியராஜன் எரிக்க முற்பட்டுள்ளார். மகனின் மரணத்தில் சந்தேகமடைந்த தாய் ராஜமணி தேனி நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி மயானத்தில் இருந்த சுந்தரபாண்டியன் உடல் கைப்பற்றப்பட்டு பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செயய்ப்பட்டது.
அப்போது பணத்தகராறில் தம்பியை கொலை செய்து பாண்டியராஜன் நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாண்டியராஜன் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி அப்துல்காதர், பாண்டியராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை செய்து தடயங்களை மறைக்க முயற்சி செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளி பாண்டியராஜனை மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்