மதுரை மக்களவை உறுப்பினரும் மத்திய ரயில்வே நிலைக்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் இன்று (ஜன.8) மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். முதலாவதாக ஆண்டிபட்டி கணவாய், ஆண்டிபட்டி, தேனி ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "உலகப்போரின் போது கூட அகற்றப்பட்ட மதுரை - போடி வழித்தடத்தில் இருந்த தண்டவாளங்கள் 8ஆண்டுகளில் மீண்டும் போடப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்தன. ஆனால் தற்போது போர்க்காலத்தை விட மோசமாக ஒன்பதரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது மதுரை - போடி ரயில் வழித்தடம்.
இந்தியாவில் வருடத்திற்கு 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பழைய தண்டவாளங்கள் புதுப்பிப்பதற்கே போதிய நிதி இல்லாத நிலையில் புதிய வழித்தடங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது என ரயில்வே துறை தெரிவித்தது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்திற்கே 2.7 கோடி ரூபாய் தான் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களது தொடர் வலியுறுத்தலின் காரணமாக மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதனடிப்படையில் தற்போது இத்திட்டத்திற்கான முழு நிதியும் கிடைக்கப்பெற்று முழுமை அடைய உள்ளது.
மதுரை முதல் ஆண்டிப்பட்டி வரை பணிகள் முடிவடைந்து கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஏப்ரல் மாதத்துக்குள் தேனி வரையிலும், செப்டம்பருக்குள் போடிநாயக்கனூர் வரையில் பணிகள் முடிவடையும் என தென்னக ரயில்வே தனக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளது.
ஏப்ரலில் தேனி வரை பணிகள் நிறைவடைந்ததும், மே மாதத்தில் இருந்து பயணியர் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். அதோடு மட்டுமல்லாது, சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் விரைவு ரயிலை தேனி வரை நீட்டிக்க வேண்டும். இதுதவிர, மே மாதம் முதல் தேனியில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணியர் ரயில் இயக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: டிசம்பரில் மீண்டும் தொடங்குகிறது மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்!