தேனி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து விளம்பரத்தில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு, மதுரை மாவட்டம் கொடிக்குளத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவரிடம் பேசினார்.
இதையடுத்து அன்புச்செல்வனிடம் இருந்து ஒரு காரை 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்க பேசி முடித்துள்ளார். காரை வாங்குவதற்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானிக்கு வரும்படி கூறியதையடுத்து, மதன்ராஜ் அங்கு சென்றார். அங்கு அன்புச்செல்வனை தொடர்பு கொண்டபோது, தான் மருத்துவ பரிசோதனைக்காக வெளியூர் வந்துவிட்டதாகவும், அங்குள்ள தனது நண்பர்கள் ஆனந்த் மற்றும் முருகன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்துவிட்டு காரை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்களிடம் பணத்தை கொடுத்த மதன்ராஜ் காரை எடுத்துச் சென்றார். சில நாள்கள் கழித்து கார் புரோக்கரான மதன்ராஜ் அதே காரை 9 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மறுவிற்பனை செய்தார். இதையடுத்து சிலநாள்களில் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டுபிடித்து கேரளா மாநிலத்தில் இருந்து வந்த போலீசார், இந்த கார் திருடப்பட்ட கார் என்று கூறி அதை விக்னேஷிடம் இருந்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், தான் கார் வாங்கிய மதன்ராஜை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி, தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மதன்ராஜ், தான் கார் வாங்கிய அன்புச்செல்வனை தொடர்பு கொள்ளா முடியாமல் இருந்துள்ளார்.
ராஜதானியில் கார் வாங்குவதற்கு பணம் கொடுத்த முருகன் மற்றும் ஆனந்தை தொடர்பு கொள்ளவும் முயன்றார். அவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை. பலமுறை முயன்றும் இவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் மதன்ராஜ் புகார் செய்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அடங்கிய தனிப்படை குழுவினரும் தீவிரமாக தேடிவந்தனர். அதில் காரை விற்பனை செய்த அன்புச்செல்வனுக்கு உதவிய முருகன், ஆனந்தன், மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகிய ஆறு பேர்கள் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் காரின் என்ஜின் நம்பர், சேஸ் நம்பர் மற்றும் ஆர்சி புக் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயார் செய்யப்பட்டது தெரியவந்தது. ஆவணங்களில் போலியாக அரசின் முத்திரை, ரப்பர் ஸ்டாம்புகள் தயார் செய்யப்பட்டு போலி கையெழுத்து போட்டு ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
கார், டிராக்டர், ஜேசிபி வாகனம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டு இதுபோன்று போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி மோசடி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது!