தேனி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இதில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் டி.ஐ.ஜி முத்துச்சாமி கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பேசிய முத்துச்சாமி, “தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறுவது போன்ற செய்திகள் வெளியாகின்றன. மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக்குழு இணைந்து குழந்தை திருமணங்களை தடை செய்து வருவதால் இந்த சம்பவங்கள் தொடர்பான செய்திகள் அதிகம் வெளியாகிறது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கிடைக்கப்பெற்றதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “83 விழுக்காடு பெண் குழந்தைகள், 17 விழுக்காடு ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் நாளொன்றுக்கு தினசரி எட்டு பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவற்றில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களில் மூன்றில் ஒரு பங்கு இளம்சிறார்கள் என்பது கவலையளிக்கிறது. இவற்றையெல்லாம் விட ஐந்து மாத பெண் குழந்தை முதல் 17வயது வரையுள்ள பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித விசாரணையுமின்றி தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
எனக்கு சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை விட நம் நாட்டின் பன்பாடு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் நம்பிக்கை அதிகம். எனவே, குற்ற சம்பவங்கள் தொடர்பாக குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பெருமளவு குற்றச்செயல்களை தடுத்திடுலாம்” எனத் தெரிவித்தார்.