மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்துவருகின்றது. இவற்றில் பெரியகுளம், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழையால் கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சளாறு உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (செப்.4) மதியம் முதல் பெய்ய தொடங்கிய மழையானது மாலைவரை விடாமல்பெய்து இரவுவரை நீடித்தது. இதன் காரணமாக பெரியகுளம் நகராட்சிக்குள்பட்ட 28ஆவது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் மாரியம்மாள், தங்கம் ஆகிய இருவரது வீடுகளின் ஒரு பக்கச் சுவர் அடியோடு இடிந்து விழுந்தது.
இதேபோல் 29ஆவது வார்டில் வசிக்கும் பிரியங்கா, செல்லத்தாய் ஆகியோரின் வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்துவிழுந்து சேதம் ஆனது. இடிந்து விழுந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர்கள் அனைத்தும் வெளிப்புறத்தில் விழுந்ததால் வீட்டில் குடியிருந்த யாருக்கும் நல்வாய்ப்பாக எந்தக் காயமும் ஏற்படவில்லை.
ஆனால், 4 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.